கரூர்: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர் தொழில்பேட்டை, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் தன்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறி வாக்காளர்களின் காலில் வேட்பாளர் செந்தில்நாதன் விழுந்தார். தொடர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர், "5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என ஏற்கனவே வெற்றி பெற்றவர்களின் நினைக்கிறார்கள்.
தொகுதியில் உள்ள மக்கள் கஷ்டங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. அவர்களது குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். இதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில், வளர்ச்சிக்காகப் பாடுபடக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினரை இம்முறை பொதுமக்களாகிய நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒருமுறை கூட குறைகளைக் கேட்டு அறியாத நாடாளுமன்ற உறுப்பினர் எதற்கு என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்கிறோம். 100% பாஜக மீது நம்பிக்கை வையுங்கள்.
மீண்டும் நரேந்திர மோடியைப் பிரதமர் பதவியில் அமர வைப்பதற்குத் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொள்ள எனது தொலைப்பேசி எண்ணை உங்களுக்குத் தருகிறேன். எத்தனை முறை அழைத்தாலும் மக்கள் பிரச்சனைக்காகச் சேவை செய்ய வருவேன்" என கூறி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: தெலங்கானா எம்எல்சி கவிதா கைது! திகார் சிறையில் வைத்து சிபிஐ கைது! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணை! - Delhi Liquor Scam