திருநெல்வேலி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதன்படி, பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், பாஜக கூட்டணி 300க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மேலும், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தமிழ்நாடு தேர்தல் களம்: தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதேநேரம், யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக பல்வேறு இடங்களில் மூன்றாவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, பல தொகுதிகளில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது. இறுதியாக சுமார் பத்து தொகுதிகளில் பாஜக அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், கூடுதல் அதிர்ச்சியாக நெல்லை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி டெபாசிட் இழந்துள்ள சம்பவம் அக்கட்சி நிர்வாகிகள் இடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையிலிருந்தார்.
தொடர்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை வகித்தார். அதேநேரம், நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியாக கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வந்தார். இருப்பினும், கடைசிவரை அவரால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற முடியவில்லை. நயினார் நாகேந்திரன் 3,36,676 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
டெபாசிட் இழந்த அதிமுக: அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி ஆரம்பத்திலிருந்தே நாம் தமிழர் வேட்பாளர் சத்யாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று வந்தார். குறிப்பாக, மொத்தம் 24 சுற்றுகள் இருந்த நிலையில், 16 சுற்றுகள் வரை நாம் தமிழர் வேட்பாளர் தான் மூன்றாவது இடத்திலிருந்து வந்தார். அதிமுக நான்காவது இடத்தைப் பிடித்தது.
பின்னர், ஒரு வழியாக 17வது சுற்றுக்குப் பிறகு அதிமுக, நாம் தமிழர் வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்றது. இறுதியாக 24 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அதிமுக 89,601 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. நாம் தமிழர் கட்சி சத்யா 87,686 வாக்குகள் பெற்று நான்காம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இரண்டு பேருமே தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழகத்தின் பெரிய கட்சியான அதிமுகவின் வேட்பாளர் ஜான்சி ராணி டெபாசிட் இழந்துள்ளார். மேலும், இதுவரை நடைபெற்ற தேர்தல் வரலாற்றில் நெல்லை தொகுதியில் முதல் முறையாக அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
அதிமுக கோட்டையாக இருந்ததா நெல்லை? 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் நெல்லையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெற்று வருகின்றன. 1972ல் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் நெல்லை தொகுதியில் அதிமுக தான் அதிக முறை (7 முறை) வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
1972க்கு முன்பே பொதுத் தேர்தலைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கூட 5 முறை தான் இங்கு வென்றுள்ளது. மேலும், திமுக வெறும் 3 முறை மட்டுமே நெல்லையில் வென்றுள்ளது. மேலும், அதிமுக தோல்வி அடையும் போதெல்லாம் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசுர பலத்தோடு இருந்து வந்தது. எனவே, இவ்வளவு வலுவான கட்சியாக இருந்து அதிமுக இம்முறை 1 லட்சம் வாக்குகளுக்கும் குறைவாக வாங்கி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு டெபாசிட்டும் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்டபடி அதிமுக வாக்குகளை அறுவடை செய்த நயினார் நாகேந்திரன்: நெல்லை தேர்தல் களத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நயினார், நாகேந்திரன் ஆரம்பத்தில் தீவிர அதிமுக விசுவாசி. எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தார். அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த நயினார் நாகேந்திரன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
பாஜகவில் பணியாற்றினாலும், தொடர்ந்து எம்ஜிஆர் ரசிகனாகவே இருந்து வந்தார். தற்போது வரை அவர் தனது செல்போனில் எம்ஜிஆர் ரிங்டோன் தான் வைத்துள்ளார். அவர் பாஜகவில் இருந்தாலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள மூத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் கிராமப்புற மக்கள் இன்னமும் அவரை அதிமுககாரராகவே கருதுகின்றனர். தற்போது நெல்லை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சர் கனவோடு எம்பி சீட் வாங்கினார்.
இது போன்ற சூழ்நிலையில் தான் தேர்தல் களத்தில் தனது அதிமுக பிம்பத்தை நயினார் நாகேந்திரன் துல்லியமாகப் பயன்படுத்தினார். குறிப்பாக, பிரச்சாரம் தொடங்கும் போதே எம்ஜிஆர் பாடல் ஒலித்தபடி தான் தொடங்கினார். மேலும், அவர் பிரச்சாரத்திற்குச் செல்லும் அனைத்து இடங்களிலும் எம்ஜிஆர் பாடலை ஒலிக்கத் தவறவில்லை. இதன் மூலம் அவர் அதிமுக வாக்குகளைக் கவருவதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
குறிப்பாக, பல அதிமுக நிர்வாகிகளை நாகேந்திரன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நயினார் நாகேந்திரனிடம் கேட்ட போது, “அது போன்று இல்லை நான். எம்ஜிஆர் ரசிகன் என்பதால் பாடலை பயன்படுத்துகிறேன்” என சிம்பிளாக பதில் அளித்திருந்தார். அதேநேரம், மறைமுகமாக அதிமுக வாக்குகளை நயினார் நாகேந்திரன் ஈர்ப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது அந்த கருத்து உண்மையாகி உள்ளது.
இதையும் படிங்க: விறுவிறுப்பாகும் அரசியல் களம்.. இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது! - INDIA Alliance Meeting