பெரம்பலூர்: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு (5 பூத்துகள் சேர்ந்தது ஒரு சக்தி கேந்திரா) பாராட்டுப் பரிசு வழங்கும் விழா, பாஜக சார்பில் இன்று பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலையிடம் 25 எம்பிக்களை பெற்றிருந்தால் தமிழகத்திற்கு அதிகமான நிதியைக் கேட்டு பெற்றிருக்க முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்து கேட்டதற்கு, “ஒரு மாநிலத்திற்கு மட்டும் எப்படி நிதி கொடுக்க முடியும். அதிக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் பொழுது உரிமையுடன் கேட்க முடியும் என்பதையே அவர் அப்படி தெரிவித்துள்ளார். பிரதமரைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒரு எம்பி இருந்தாலும் அதே மரியாதை தான் 39 எம்பிக்கள் இருந்தாலும் அதே மரியாதைதான். பாரபட்சம் இல்லாமல் மக்களுக்காக பிரதமர் செயல்பட்டு வருகிறார்” இவ்வாறு அவர் கூறினார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேசிவிட்டு வெளியில் வந்து ஐந்து நிமிடங்களில் எனது மைக் ஆஃப் செய்யப்பட்டது என்று பொய்யான தகவலை கூறி வருகிறார். இது குறித்து நிதி ஆயோக் கூட்டத்தின் நிர்வாக தலைவர் சுப்பிரமணியம், மைக்கை ஆஃப் செய்யும் முறை அங்கு கிடையாது என்று தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
இன்றைய தினம், பெரம்பலூர் மாவட்டத்தில், @BJP4Tamilnadu சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மற்றும் பாஜக சகோதர சகோதரிகளிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
— K.Annamalai (@annamalai_k) July 28, 2024
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நேற்றைய தினம் நம்மை விட்டுப் பிரிந்த… pic.twitter.com/PV7oKmD31x
தொடர் புறக்கணிப்பு: நமது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2022 நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை. அதற்கு, அவரது தந்தை கருணாநிதி உயிரிழந்த நினைவு நாள், அதனால் செல்லவில்லை என்று தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு கூட்டத்திற்கு அவர் செல்லவில்லை. அப்பொழுது வெளிநாடு பயணம் சென்றிருந்தார். தற்பொழுது நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம் பெறவில்லை என்று கூறி நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்துள்ளார்.
முதலமைச்சர் நேரில் சென்று தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களையும், அடுத்த இலக்குகள் பற்றியும் பிரதமரிடம் எடுத்துரைத்திருக்க வேண்டும். முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நாங்கள் ஏற்கனவே பதில் அளித்துள்ளோம். எனவே, முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் 2026: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டியை எதிர்பார்க்கின்றோம். கடுமையாக போராடி வெற்றி பெறுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2024 தேர்தலில் 18.5 சதவீத வாக்கு வங்கியை தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதனால் கட்சித் தொண்டர்களை நம்பி அடுத்த படிக்குச் செல்வோம். தற்பொழுது இருக்கின்ற கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கையில் புதியவர்கள் வருகை குறித்து கேள்வி தேவையில்ல” என்றார்.
நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, “அவர் தற்பொழுதுதான் புதிதாக வந்திருக்கிறார். அவருடைய சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் அவர்களுடைய திட்டங்கள் என்ன? எதிர்கால அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் தெரிய வேண்டும். அதனால் அது பற்றிய தற்பொழுது கருத்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கொலை நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்!