சென்னை: மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மத்திய அமைச்சர் எல்.முருகன் டெல்லியிலிருந்து இன்று (பிப்.25) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்குத் தமிழக பாஜக சார்பாக மேளதாளத்துடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து எல் முருகன் பேசுகையில், “மத்திய பிரதேசத்திலிருந்து தமிழகத்தில் பிரதிநிதியாக எனக்கு இரண்டாவது முறையாகத் தேர்வு செய்துள்ளார்கள். தமிழகத்தின் நலன் கருதியும் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக என்னைத் தேர்வு செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நாளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வெற்றி வேல் யாத்திரை மூலம் சட்டமன்றத்திற்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றார்கள். அதைப்போல என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். இந்த யாத்திரை மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயதாரணியை பாஜக வரவேற்கிறது. வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவிக்கும். தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மேல் மக்கள் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் கூறியது போல் எதுவும் செய்யவில்லை. மின்சாரக் கட்டணம், நிலவரி கட்டணம் அனைத்தும் அதிக அளவில் உயர்ந்துள்ளது இதனால் பெருமளவில் மக்கள் பாதித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: மன் கி பாத் நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்கு கிடையாது - மோடி சொன்ன காரணம் என்ன?