சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பாஜக கூட்டணியிலுள்ள தமாகாவிற்கு ஈரோடு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமாகா சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியல் நேற்று (மார்ச்.22) அறிவிக்கப்பட்டது. இதில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் விஜயகுமார் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேணுகோபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும், தூத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளர் இன்று (மார்ச்.23) அறிவிக்கப்படுவார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது த.மா.கா சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த எஸ்.டி.ஆர்.விஜயசீலன்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் உள்ளார். இவரது தந்தை தர்மராஜ், தாய் சொர்ணமணி, மனைவி ரீனா சீலன் மற்றும் மகன் அஜய் டேனியல் சாம்ராஜ் ஆவர். இவர் கிறிஸ்துவ நாடார் வகுப்பைச் சார்ந்தவர். இவர் முழுநேர அரசியல் வாதியாகவும் விவசாயமும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்; சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி அறிவிப்பு! - AIADMK Nellai Candidate Change