தர்மபுரி: 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதல்கட்ட பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசு வெளியிட்டு இருந்தார். அதன்படி, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் அறிவிக்கப்பட்டார்.
காலையில் அவர் அறிவிக்கப்பட்ட பிறகு தொடர்ந்து கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியினர் என பல்வேறு நபர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பலமான வேட்பாளர் இல்லை என தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தர்மபுரியில் போட்டியிடும் திமுகவின் ஆ.மணி, அதிமுகவின் அசோகன் ஆகியோரை எதிர்த்து களமிறங்க, பலமான வேட்பாளர் தேவை என வாதிடப்பட்டது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும் பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணியை பாமக தலைமை தர்மபுரி தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளது. தொடர்ந்து, பத்து ஆண்டுகளாக விஐபி தொகுதியாக இருந்த தர்மபுரி, மீண்டும் விஐபி தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் கடலூரில் களமிறங்கும் இயக்குநர் தங்கர் பச்சான்!