திருநெல்வேலி: தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில், தற்போது திருநெல்வேலி நடுக்கல்லூர் பகுதியில் டன் கணக்கில் உயிரியல் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடுக்கல்லூர் பகுதியில் உள்ள குளத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் குறித்து, சுத்தமல்லி போலீசார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பொது இடத்தில் வேண்டுமென்றே பொறுப்பற்ற முறையில், உயிருக்கு ஆபத்தான தொற்று நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும் வீரியமிக்க மருந்து கழிவுகளை கொட்டுதல், பொது சுகாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நடத்தையில் வேண்டும் என்று ஈடுபடுவது ( BNS 271,272, 15 environment) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மருத்துவக் கழிவு கொண்டுவரப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிவு கொட்டப்பட்ட சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் உள்ள குளத்தில் பெயர் தெரியாத நபர்களால் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து நேற்று (டிச.16) திங்கட்கிழமை பழவூர் கிராம நிர்வாக அலுவலர், கேரள மாநிலத்தில் இருந்து இந்த மருத்துவக் கழிவுகள் இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாக, சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சுத்தமல்லி போலீசார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த வீடியோவில், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் உள்ள காகிதத்தில் கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையின் பெயர் அதில் இடம் பெற்றுள்ளது. அங்கு பல்வேறு மூட்டைகளில் உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் மருந்துச்சீட்டுகள் இருந்துள்ளது.
இதையும் படிங்க: 'உங்க வீட்டுக்கருகே பிளாஸ்டிக் தயாரித்தால் புகார் அளிங்க.. பாராட்டு பெறுங்க!' -மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு!
சமிப காலமாக, தென் மாவட்டங்களான கன்னியாகுமர், தென்காசி மற்றும் திருநெல்வேலியில் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்தே இத்தைகைய மருத்துவக் கழிவுகள் லாரிகளில் கொண்டுவரப்பட்டு இரவு நேரங்களில் கொட்டப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
அண்ணாமலை கண்டனம்:
இந்த நிலையில், கேரள கம்யூனிஸ்ட் அரசுடன், திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் நிலையில், கேரளாவின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “ காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் முதலமைச்சர் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்ற முதலமைச்சர் அனுமதித்துள்ளார்.
காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின்… pic.twitter.com/egdyR3x3ue
— K.Annamalai (@annamalai_k) December 17, 2024
சோதனைச் சாவடிகளா? வசூல் மையங்களா?
லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மாறிவிட்டன. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது.
குப்பைக் கிடங்காக மாறும் தமிழகம்:
இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பலமுறை புகார் அளித்தும், இவற்றை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க திமுக அரசுக்கு தெரிந்தே நடைபெறுகின்றது. கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன்” இவ்வாறு அண்ணாமலை அதில் குறிப்பிட்டுள்ளார்.