மதுரை: யானை ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமநாத சுவாமி கோயில் பகுதியில் இருந்து அக்னி தீர்த்தம் செல்வதற்கான சாலை மற்றும் கோயிலை சுற்றி உள்ள சாலைகள் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
அக்னி தீர்த்தம் அருகே ராமேஸ்வரம் நகராட்சியில் இருந்து வெளிவரும் கழிவுநீர் கடலில் கலக்கிறது. பக்தர்கள் புனித நீராக கருதப்படும் அக்னி தீர்த்தம் அருகே கழிவுநீர் கலப்பதால் கடல் நீர் அசுத்தமாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ராமேஸ்வரம் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : உட்காந்துட்டன்ல.. மதுபோதையில் பஸ் டிரைவர் மடியில் அமர்ந்து அட்ராசிட்டி செய்த நபர் கைது!
இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்தது. அப்போது அக்னி தீர்த்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை என்ன செய்கிறீர்கள்? அந்த தண்ணீர் மீண்டும் கடலிலேயே கலக்கப்படுகிறதா? எனவும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும், கழிவுகளும் என்ன செய்யப்படுகின்றன? என்பது தொடர்பாக நகராட்சி ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்