தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கியூ பிரிவு போலீசார் அங்கு சென்று பார்த்ததில், கலைஞானபுரம் கடலுக்குச் செல்லும் வழியில், சந்தேகத்திற்கிடமான வகையில் TN69 BQ 9901 என்ற வாகனப் பதிவெண் கொண்ட பிக்கப் லோடு வேன் சென்று கொண்டிருந்துள்ளது.
அதை நிறுத்தி சோதனை செய்ததில், 30 கிலோ எடை கொண்ட 44 மூட்டைகளில் 1,320 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கியூ பிரிவு போலீசாரால் விசாரணை செய்யப்ப்ட்ட நிலையில், இந்த பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, கியூ பிரிவு போலீசார் லாரியின் ஓட்டுநரான தூத்துக்குடி காமராஜ் நகரைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் சூரியகுமார் என்பவரை கைது செய்து, 1.3 டன் பீடி இலைகளை வாகனத்துடன் பறிமுதல் செய்து, அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவர் கைது! திண்டுக்கலில் நடந்தது என்ன?