கோயம்புத்தூர்: நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோயம்புத்தூர் பந்தைய சாலை, ரெட்ஃபீல்டு பகுதியில் ராணுவ வீரர்களின் பைக் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கமாண்டர் விக்ரம் சிங் துவங்கி வைத்தார்.
பேரணியில் 80-க்கும் மேற்பட்ட வீரர்கள், இருசக்கர வாகனங்களில் தேசியக் கொடி ஏந்தியவாறு, ராணுவத்தின் வளாகத்தில் இருந்து ரெட் பீல்ட்ஸ் சாலை, பந்தைய சாலை, வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் பேரணியாகச் சென்றனர். பேரணியில் இருசக்கர வாகனங்களை பின்தொடர்ந்த ராணுவ வாகனத்தில் தேசியக் கொடிகள் ஏந்தி தேசப்பற்று பாடல்களை பாடியபடி சென்றனர். இதனை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கண்டு ரசித்தனர்.
ட்ரோன் மூலம் பறந்த கொடி: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் அரசூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது கல்லூரி வளாகம் முழுவதும் ட்ரோனில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உருவாக்கிய ரோபோ, தேசிய கொடி ஏந்தி சுதந்திர தின வாழ்த்துகள் கூறியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
போலீசார் பேரணி: முன்னதாக, இன்று காலை கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து மூவர்ண பலூன்களை குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் வானத்தில் பறக்கவிட்டார்.தொடர்ந்து கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 83 பேர், அரசு அலுவலர்கள் 140 பேர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், மொழிப் போராட்ட தியாகிகள் எனப் பலருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாகா கொடி அணிவகுப்பைப் போன்று கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பை மேற்கொண்டனர். அந்த நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இதில் 52 பேர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் முதல்முறையாக இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி மவுத் ஹார்ன் வாசித்து அசத்திய கோயில் யானை!