திருச்சி: திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட முடுக்குபட்டி சந்திப்பில், நேற்று வாகன சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை தனது இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக வைத்திருந்த புத்தூரைச் சேர்ந்த ஜெயராமன் (35) மற்றும் கல்லுகுழியைச் சேர்ந்த சாதிக்பாட்சா (43) ஆகியோரிடம் ஹான்ஸ் 75 கிலோ, பான்மசாலா 3 கிலோ என ரூ.95,000 மதிப்புள்ள 108 கிலோ குட்கா பொருள்களைக் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உடனடியாக குட்கா பொருட்கள், குட்கா விற்பனை செய்த பணம் ரூ.82,000, 108 கிலோ குட்கா பொருட்கள் கடத்த பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும், போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இன்று தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஹிதாயத் நகர் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், அரசால் தடை செய்யப்பட்ட ரூ.55,000 மதிப்புள்ள 70 கிலோ குட்கா பொருள்களைக் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக போலீசார் குட்கா பொருட்கள், குட்கா பொருள்களைக் கடத்த பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தும், குட்கா பொருட்களைக் கடத்தி வந்த ஆழ்வார்தோப்பைச் சேர்ந்த ஹபிபுதீன் (26) என்வரையும், மளிகைக் கடையில் வைத்து விற்பனை செய்ததாக காஜா மைதீன் (24) ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வைச் சீரழிக்கும் போதைப்பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "பாஜக கொண்டு வந்த பல பாதகமான சட்டங்களை இந்தியா கூட்டணி திருத்தும்" - திருச்சி எம்பி சிவா!