ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் அத்துமீறியதாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் வசித்து வந்த சுலைமான் கான் (30) என்பவரை, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்ட சுலைமான் என்கிற சுலைமான் கான் கொடுத்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்களின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் அளித்த ஆதார் அட்டை மற்றும் ஆவணங்களை சோதனை செய்தபோது, அவை அனைத்தும் போலியான ஆவணங்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பின்னர், சுலைமான் கானிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட சுலைமான் கான் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த அனுமுல்கான் என்பவரின் மகன் என்பதும், இவர் கடந்த 2017ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் பங்களாதேஷிலிருந்து இந்தியாவிற்கு வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, தமிழகம் வந்த சுலைமான் கான், பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தவர். மேலும், சுற்றுலா விசாவிற்கான காலம் முடிந்த பிறகும் பங்களாதேஷ் திரும்பாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரீத்தி ஸமத் என்பவருடன் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
அப்பொழுது, ஆதார் கார்டு உள்ளிட்ட போலியான ஆவணங்களைத் தயார் செய்து இங்கே தங்கி இருந்ததும் தெரிய வந்ததையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுலைமான்கான், போலி ஆவணங்கள் மூலமாக சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்த வழக்கின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதையும் படியும்: நற்பணி இயக்கத்தைப் பலப்படுத்தும் நடிகர் சூர்யா.. அரசியலுக்கு அடித்தளமா? - Actor Suriya In Politics