கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழையும், மற்ற பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மலையும் பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், பேச்சிப்பாறை, சிற்றார் அணைகள் நிரம்பி வருவதால் அணைகள் திறக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திற்பரப்பு அருவியில் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்ட வருவதால், அங்கு பாதுகாப்பு கருதி அருவிக்குச் செல்லும் நுழைவாயில் பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வராமல் தடுக்க வருவாய்த் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அங்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனிடையே, மாற்று வழிகளில் யாரும் இப்பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்கும் பொருட்டு, பஞ்சாயத்து நிர்வகாத்துடன் இணைந்து வருவாய்த்துறையும், காவல்துறையும் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கன்னிமார் 43.2, கொட்டாரம் 81.2, மயிலாடி 140.2, நாகர்கோவில் 36 ஆரல்வாய்மொழி 54, முக்கடல் 47.6 பாலமோர் 65.2, தக்கலை 83.2, கோழிப்போர் விளை 63.2 மாம்பழத்துறையாறு 78.4 சிற்றார் 1- 36.2, சிற்றார் 2 - 41.2, பேச்சிப்பாறை 58 பெருஞ்சாணி 52.6, புத்தன் அனை 23.6, திற்பரப்பு 27.8, சுருளோடு 48.6 முள்ளங்கினாவிளை 48.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: உதகையில் மீண்டும் துவங்கியது மலை ரயில் சேவை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! - Ooty Hill Train Service