திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் பல் பிடுங்கிய விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த ஏஎஸ்பி பல்வீர் சிங் இன்று (ஜன.31) விசாரணைக்காக திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராகினார். அப்போது, இவ்வழக்கில் வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
நான்கு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் உதவி ஆய்வாளர் முருகேஷ் மற்றும் காவலர் ஆபிரகாம் ஜோசப்பை தவிர மற்ற 12 பேரும் ஜே எம்.ஒன்.நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிபதி ஆறுமுகம் வருகிற ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2023, டிசம்பர் 26 ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் உட்பட 12 பேர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் நீதிபதி ஆறுமுகம் முன்னிலையில் ஆஜராகினர்.
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக வந்த நபர்களின் பற்களைப் பிடுங்கி வன்கொடுமை செய்ததாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கொண்ட விசாரணையின் படி, மார்ச் 29ஆம் தேதி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துணை மருத்துவ கவுன்சில் தலைவர்களை 2 மாதங்களில் நியமிக்கவும் - சென்னை உயர்நீதிமன்றம்