சென்னை: இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி கே. பழனிசாமி: இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இஸ்லாமியர்களின் தியாகத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.
அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும். பக்ரீத் திருநாள் சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளாதது தான் உலகம் முழுவதும் இன்று நிலவும் அனைத்து மோதல்களுக்கும், வீழ்ச்சிகளுக்கும் காரணமாக உள்ளது. பக்ரீத் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது.
அன்புமணி ராமதாஸ்: இறைபக்தியை வலியுறுத்தும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் சொல்லும் பாடம் தான் உலகின் பகையை ஒழிக்கும் பாடம் ஆகும். அந்த பாடத்தை நாம் அனைவரும் கடைபிடித்தால் உலகிலுள்ள அனைவரும் சகோதரர்களாகி விடுவார்கள். அப்படி ஒரு அதிசயம் நிகழ வேண்டும் என்பது தான் அமைதியையும், மகிழ்ச்சியையும் வேண்டும் அனைவரின் விருப்பம் ஆகும். அந்த விருப்பம் நிறைவேற வேண்டும்.
கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி: பக்ரீத் பண்டிகை கொண்டாடும் புனித நாளில் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் கொண்டுவரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் ஒத்திவைப்பு! என்ன காரணம்? - PM Modi TN Visit Postponed