கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவனூர் மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் கேஸ் குடோன் அருகே யானை குட்டி ஒன்று நின்று கொண்டிருப்பதாக, அப்பகுதி மக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்தகவலில் அடிப்படையில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனக்குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு பிறந்து மூன்று மாதங்களான ஆண் யானை குட்டி ஒன்று, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்து, அப்பகுதியில் நிற்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, யானை குட்டிக்கு நீர் ஆகாரங்கள், சத்து மருந்துகள், குளுக்கோஸ் உள்ளிட்டவைகள் வழங்கி உள்ளனர். பின்னர், யானை குட்டியின் கூட்டத்தை வனக் குழுவினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, புளியந்தோப்பு சரகம் பகுதியில் யானைக் கூட்டம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்த வனத்துறையினர், இந்த குட்டி யானையை அக்கூட்டத்தில் இருந்த பெண் யானை அருகே கொண்டு சென்று விட்டனர். அதனை அடுத்து, அந்த பெண் யானை அந்த யானை குட்டியை ஏற்றுக்கொண்டது.
இதையும் படிங்க: நீலகிரி: குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி, சிறுத்தை.. வைரலாகும் வீடியோ!
இதனை அடுத்து, கூட்டத்துடன் சேர்க்கப்பட்ட யானை குட்டியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து கோவை மண்டல வன பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான ராமசுப்பிரமணியன் கூறுகையில், "தனித்து விடப்பட்ட யானை குட்டியை வனத்துறையினர் கண்டறிந்து, அதற்கு மருத்துவர்கள் மூலம் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
அதன் பின்னர், அதற்கு நல்ல சத்தான உணவுகள் வழங்கி, அதன் கூட்டத்துடன் இனைக்கும் முயற்சியில் பெரியநாயக்கன்பாளையம், கோவை மற்றும் பொள்ளாச்சி வனத்துறையினர் இணைந்து பணியாற்றினர். இதனை 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை குட்டியின் கூட்டத்தைக் கண்டறிந்து, அதன் தாய் யானையுடன் சேர்த்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மாதம், ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே தாயை இழந்த யானை குட்டியை யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயன்றனர். ஆனால், அந்த யானை குட்டி வனத்துறையினரிடமே மீண்டும் திரும்பி வந்தது. அதனை அடுத்து, அந்த யானை குட்டி முதுமலை காப்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தைகளை வெளியே விடாதீர்கள்: மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு!