சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு கன மழை முதல் மிக கன மழையும், சில இடங்களில் அதிக கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன் படி நேற்று இரவு முதலே ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக அம்பத்தூரில் உள்ள பாடி, கொரட்டூர், பட்டரைவாக்கம், அம்பத்தூர் தொழில்பேட்டை, ஓ.டி.பேருந்து நிலையம், கள்ளிகுப்பம், புதூர், ஒரகடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் ஒரு சில இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. அதேபோல் பிரதான சாலைகளான சி.டி.எச் சாலை, கருக்கு சாலை, மாதனாங்குப்பம் சாலை, ரெட்டில்ஸ் சாலை உள்ளிட்ட பல பிரதான சாலைகளின் இருபுறமும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ட்ரோன் மூலம் உணவுப் பொருட்கள்: இந்தநிலையில் மழையால் பகுதிகளில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் அத்தியாவசிய பொருட்களை கொடுப்பது குறித்து ட்ரோன் மூலம் கொண்டு சேர்ப்பது குறித்து வல்லுநர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க: வீடுகளில் மழை வெள்ளம்.. எங்கு செல்வது என தெரியாமல் தவிக்கும் மக்கள்!
ஆதங்கத்தில் ஆவடி மக்கள்: கனமழை காரணமாக ஆவடி பேருந்து நிலையத்தில் இரண்டு அடி அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் மிக அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்து வரும் கைக்குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்களும் முதியவர்களும் தேங்கி நிற்கும் மழை நீரை கடக்க முடியாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதே போல், சாதரான நாள்களில் பல லட்சம் பேர் பயணிக்கக் கூடிய ஆவடி ரயில் நிலையத்தில், பயணிகள் இல்லாமல் ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
கனமழையால் மூடப்பட்ட காவல்நிலையம்: ஆவடி காவல் நிலையத்தில் தண்ணீர் புகுந்ததால் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறிப்பாக காவல் நிலையத்தைச் சுற்றி எரியக்கூடிய மின் விளக்குகளில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், போலீசார் யாரும் காவல்நிலையத்திற்குள் கால் வைக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டும் இதே போல் மழை நீர் சூழ்ந்ததால் ஆவடி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர்: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இப்பகுதியில் மழைநீருடன் சேர்ந்து கழிவு நீர் சேர்ந்து வெளியேறி வருவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் கால்வாய்களைச் சரியான முறையில் கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்தியதே இதற்கு காரணம் என்று அப்பகுதியைக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.