மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் காற்றுமாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் எலெக்டரிக்கள் பைக் மற்றும் இயற்கை அழுத்த எரிவாயு (சிஎன்ஜி) கேஸ் பயன்படுத்தி ஆட்டோக்கள் இயக்கும் முறை நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சிஎன்ஜி கேஸில் இயக்கப்பட்டு வருகின்றன.
அவற்றுக்கு கேஸ் பிடிப்பதற்கான பங்குகள் மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரம், சேத்திரபாலபுரம் ஆகிய 2 பகுதிகளில் மட்டுமே உள்ளது. தற்போது சிஎன்ஜி கேஸ் நிரப்புவதற்கு லட்சுமிபுரத்தில் உள்ள பங்கில் 300 கிலோ கொள்ளவும், சேத்திரபாலபுரத்தில் உள்ள பங்கில் 600 கிலோ கொள்ளவும் உள்ளது. ஆனால், லட்சுமிபுரத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.76-ம், சேத்திரபாலபுரத்தில் ரூ.71-ம் வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒரு பங்கிற்கும் மற்றொரு பங்கிற்கும் ரூ.5 வித்தியாசம் உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், இந்த இரண்டு பங்குகளிலும் ஆட்டோக்கள் மட்டுமின்றி, தற்போது தனியார் ஆம்னி பஸ்களும் கேஸ் நிரப்பி செல்வது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேஸ் லோடு ஏற்றி வரும் இரு லாரிகளில் ஒன்று பழுதடைந்ததால், சரிவரலோடு வரவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு தாங்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையே, நேற்று லட்சுமிபுரம் கேஸ் பங்கிற்கு கேஸ் லோடு ஏற்றிவந்த லாரியை 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அதாவது, அனைத்து ஆட்டோக்களுக்கும் கேஸ் நிரப்பிய பின்னரே லாரியை எடுத்துச் செல்ல வேண்டும் என போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அனைத்து ஆட்டோக்களுக்கும் கேஸ் நிரப்பிய பின்னர் லாரி அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், நாளுக்குநாள் கேஸ் பயன்படுத்தி இயக்கப்படும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், அதற்கான கேஸ் பங்குகள் அதிகப்படுத்தப்படவில்லை. இதனால், கேஸ் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இருக்கின்ற பங்குகளிலும் கொள்ளளவு குறைவாகவே இருக்கிறது. இதனால், ஆட்டோவை நம்பி பிழைப்பை நடத்தும் நபர்களின் தொழில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. எனவே, கேஸ் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நகை அடகு கடைக்காரரிடம் ரூ.7.5 லட்சம் மோசடி: தனியார் வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது!