சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்துள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கோவிந்தராஜ பெருமாள் கோயில் செயல் அறங்காவலர் திருவேங்கடவன் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "கோவிந்தராஜ பெருமாள் கோயிலும், நடராஜர் கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள போதிலும், பெருமாள் கோயில் தனிப்பட்ட நிர்வாகத்தில் செயல்பட்டு வருவதாகவும், கோவிந்தராஜ பெருமாள் கோயில் திருவிழாக்களுக்கு நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழு எப்போதும் இடையூறு ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுசம்பந்தமாக 1918ஆம் ஆண்டு முதல் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு, சாதகமாக உத்தரவுகளைப் பெற்றுள்ளதாகவும்" அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த 1932ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த, 1979ஆம் ஆண்டு முதல் முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்த போதும், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழு, ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும், தொடர்ச்சியாக பிரம்மோற்சவம் நடத்துவதைத் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது, மே 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்களும், அறங்காவலர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதால், பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் சிறப்பு அமர்வில், வரும் மே 10ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.