தஞ்சாவூர் : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை அரசு உதவி வழக்கறிஞர்களுக்கான ஆன்லைன் தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் தேர்வை, தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்று நடத்துவதாக தெரிகிறது. இதற்கான தேர்வு மையத்தை ஒதுக்கி 200-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தேர்வு மையத்தில் (தனியார் பொறியியல் கல்லூரி) 50க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு தேர்வு எண் மற்றும் பெயர் இந்த மையத்தில் இடம் பெறவில்லை. எனவே, உங்களை தேர்விற்கு அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் வெளியே அனுப்பி உள்ளனர். அனுமதி சீட்டு இருந்தும் தேர்வு எழுத முடியவில்லை என தேர்வர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதனால் வழக்கறிஞர்கள் பலரும் தேர்வு எழுத முடியாமல் பிற்பகல் 3 மணி வரை தேர்வு மைய வளாகம் முன்பே பரிதாபமாக காத்திருந்தனர். இதற்கு சரியான காரணத்தை தேர்வு நடத்த ஒப்புக்கொண்டுள்ள தனியார் நிறுவனமோ அல்லது தேர்வை நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமோ பதில் தராத நிலையில், தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சிவாஜி கணேசனின் ஆதரவாளர்,அதிரடி பேட்டிகளுக்கு பெயர் பெற்றவர்...அரசியல் விமர்சனங்களின் நாயகர் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் முகமது பைசல் கூறுகையில், "ஏராளமான குளறுபடிகளுடன் இத்தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும். மாற்றுத் தேதி அறிவித்து இத்தேர்வினை முறைப்படி நடத்திட வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு காரணமான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என தெரிவித்தார்.
இதேபோல், கும்பகோணத்தில் இத்தேர்வு நடைபெறும் மற்றொரு மையத்திலும் 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இதே பிரச்னையால் தேர்வு எழுத முடியாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது.