கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு பெய்த பெரும் மழையின் காரணமாக தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கால்வாயில் சரி செய்யப்பட்டு வந்த நிலையில் கால்வாயில் தண்ணீர் திறந்து விட காலதாமதம் ஏற்பட்டது. தற்போது தோவாளை கால்வாய் சரி செய்யப்பட்டு முழுமையாக பணிகள் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் தோவாளை கால்வாயில் திறந்து விடப்பட்டது.
இந்த கால்வாய் மூலம் தினமும் 150கன அடி தண்ணீர் வீதம் 138 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள 52 குளங்கள் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். மேலும் ராதாபுரம் கால்வாய் செல்லும் சுமார் நூற்றுக்கணக்கான கிராம பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ராதாபுரம் கால்வாய் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள நிலப்பாறை பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கால்வாயில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, “ராதாபுரம் தாலுகாவில் உள்ள 52 குளங்களும் நிரப்பப்படும் இதற்காக மடைகளை கண்காணிக்க ஐந்து லஸ்கர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: மெரினா மேல் பறக்கப் போகும் போர் விமானங்கள்! எங்கே? எப்படி? பார்க்கலாம்
இதையடுத்து ஆளுநர் மதசார்பற்ற தன்மை குறித்து எழுப்பட்ட கருத்திற்கு பதிலளித்த சட்டபேரவை தலைவர் அப்பாவு, “ஆளுநர் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பால் பதவிப்பிரமாணம் செய்து அதற்கு எதிராக பேசி வருகிறார். இவற்றை மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த கருத்தை ஒரு படிக்காதவன் கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு ஐபிஎஸ் படித்துக்கொண்டு இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய பின்பு அவரது வாயிலிருந்து இந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவே இல்லை. அரசியல் அமைப்பு சட்டம் 15 முதலில் ஆளுநர் படிக்க வேண்டும்.
அதில் மிக தெளிவாக ஜாதி, மதம், இனம் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது. ஒருவரையும் பிரித்துப் பார்க்க கூடாது எல்லோருக்கும் சம உரிமை என்று கூறுகிறது. மேலும் அதற்காகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டவை. இந்தச் சட்டங்கள் வந்தது யாரால் என்று ஆளுநருக்கு தெரிய வேண்டும். ஆர்எஸ்எஸ் சித்தார்த்தம், சனாதனம் தர்மம், மனு தர்மம் என்கின்றனர்.
இந்த மூன்று தருமமும் மக்களை எப்படி பிரித்து வைத்தது என்பதை அறிய வேண்டும். பெரிய பாதிப்பு ஏற்பட்டதால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 15வது பிரிவும் 17வது பிரிவும் உருவாக்கப்பட்டது. மதம் தேவை அது பக்தி மார்க்கத்தில் 100 சதவீதம் தேவை நாம் மகாத்மா காந்தி வழியை பின்பற்றி வருகிறோம். அவரை சுட்டுக் கொண்ட கோட்சே வழியை ஆளுநர் போன்றவர்கள் பின்பற்றுகின்றனர்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்