சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து 3முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீங்கி, பாஜகவில் இணைந்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவில் இணைவதற்கு முன்னதாக, விஜயதாரணி அவரது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் தலைமைக்கு அனுப்பியதாகத் தகவல் வெளியானது. இதனைச் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜயதாரணி உறுதிசெய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், பாஜகவில் இணைவதைப் பெருமையாகக் கருதுகிறேன். மேலும் சிறு வயது முதல் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லாத நான், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதனால் பாஜகவில் இணைந்துள்ளேன். மேலும் இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் அவருடன் இணைந்து பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக அல்லாத மாநிலங்கள் வேண்டுமென்றே பாஜக அரசு வகுக்கும் சிறந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லாமல் தடுத்து வருகின்றன" என்று கடுமையாகச் சாடினார். இது ஒருபுறம் இருக்க விஜயதாரணியின் ராஜினாமாவைப் பெற்றுக் கொண்ட தலைமை, அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டது.
விஜயதாரணியின் தகுதி நீக்கம் குறித்து சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் தெரிவித்ததாவது, "விஜயதாரணி தகுதி நீக்கம் தொடர்பாகக் காங்கிரஸ் உட்பட எந்த கட்சி வேண்டுமானாலும் பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுக்கலாம். விஜயதாரணி பாஜகவில் இணைத்துள்ள நிலையில் தகுதி நீக்கம் தொடர்பாக இதுவரை எந்தக் கடிதமும் வரவில்லை.
சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருப்போர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகுகூட எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாம். சட்டமன்ற உறுப்பினராக இருப்போர் கட்சி மாறினாலும், உடனடியாகத் தகுதி இழப்பு செய்யப்பட மாட்டார்கள். தகுதி இழப்பு குறித்துப் பரிந்துரைக் கடிதம் வந்தால் மட்டுமே பேரவைத் தலைவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய காரணம் என்ன?