வேலூர்: வேலூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலான, தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு நேற்று (ஜன.29) ஆய்வு செய்தனர். ஒன்பது துறைகளின் கீழ் மருத்துவமனை, பள்ளி, மாணவர் விடுதி, தடுப்பணை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது குழு உறுப்பினர்கள், ஜவாஹிருல்லா, சேவூர் ராமச்சந்திரன், பரந்தாமன், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன், “அதிகாரிகள், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் கேட்கும் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிக்க வேண்டும். மக்களுக்கான முழுமையான பயனை நாங்கள் கொண்டு சேர்க்க முடியாது, இங்கு உள்ள அதிகாரிகள் கொண்டு சேர்க்க முடியும். அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒத்த கருத்தோடு மக்களுக்கான பலனைச் செய்ய வேண்டும்” என்றார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “வேலூர் மாவட்டத்தில், சுமார் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டுப் பணி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கள் அதிகமான மருத்துவமனை மற்றும் சாலை வசதி வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர். மலைக் கிராம மக்கள், மலைப்பகுதிகளுக்கான சாலை, பேருந்து மற்றும் மருத்துவமனை வசதிகள் வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, மலைக் கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்களுக்கான பட்டாவை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
தற்போது நடைபெற்று வரும் மாநகராட்சி பணிகளில், ஒரு சில பணிகள் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் நிறைவடைய உள்ளது. மற்ற பணிகள் நிறைவடைய ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டு காலமாகும். தற்போது மேற்கொண்டு வரும் பணிகளுக்கான நிதி, போதுமான அளவு உள்ளது.
மாநகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது சுகாதாரம் இன்மையைக் கண்டறிந்து, அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டு அது சரி செய்யப்பட்டது. மதிப்பீட்டுக் குழு அல்லது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
9 துறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, அதில் மீன்வளத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். மற்ற துறைகளின் செயல்பாடுகள் திருப்தியாக இருந்தது. பணிகளைக் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து அறிக்கையாகச் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைத்தல், வேலூர் பென்டெண்ட் மருத்துவமனை மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக ரூ.170.70 லட்சம் அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு, வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக 14 வகுப்பறைகள், 3 அறிவியல் ஆய்வுக் கூட்டங்கள், இரண்டு ஆண்கள் கழிவறை மற்றும் இரண்டு பெண்கள் கழிவறை கட்ட ரூ.429.6 லட்சம் நிதி ஒதுக்கீடு வேண்டுதல் உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மகனாக நான் இருக்கிறேன்" - பூரணம் அம்மாளிடம் நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!