கடலூர்: கடலூர் காராமணி குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காராமணி குப்பத்தைச் சேர்ந்த சுதன் குமார் அவருடைய தாய் கமலேஸ்வரி மற்றும் சுதன் குமாரின் மகன் நிஷாந்தன் ஆகிய மூன்று பேரும் கடந்த ஜூலை 14ஆம் தேதி காராமணி குப்பத்தில் உள்ள தங்களது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மூவரும் கொலை செய்யப்பட்டு பின்பு தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏழு தனிப்படைகளை அமைத்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
200க்கும் மேற்பட்டோரிடம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதே தெருவில் வசித்து வரும் சங்கர் ஆனந்த் என்பவரை நேற்று சென்னையில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், அவரை நெல்லிக்குப்பம் கொண்டு வந்து விசாரித்த போது, அவருடன் சாகுல் ஹமீது என்பவரும் இணைந்து கொலைச் சம்பவத்தில் செயல்பட்டது தெரியவந்தது.
பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்தார். அதன்படி, “தந்தையை இழந்த நான் தாயுடன் வாழ்ந்து வந்தேன். கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய தாயார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் சுதன்குமார் தான் என தெரியவந்தது. அதனால் குடும்பத்துடன் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி கமலேஸ்வரி பேரனுடன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நிஷாந்தனிடம் நான் சென்று விளையாடினேன். அப்போது என்னை அனாதை என்ற வார்த்தையைச் சொல்லி கமலேஸ்வரி திட்டியதால் கடும் கோபம் அடைந்தேன். அதனால் அன்றிரவே அவரது வீட்டிற்குச் சென்று மூன்று பேரையும் வெட்டிப் படுகொலை செய்தேன். அப்போது கத்தி தவறுதலாக என்னுடைய இன்னொரு கையில் பட்டு என்னுடைய விரல் துண்டானது.
மேலும், கடந்த ஜூலை 14ஆம் தேதி காலையில் ஷாகுல் ஹமீதுடன் மீண்டும் அந்த வீட்டிற்க்குச் சென்று அங்கு உடல்களை தீ வைத்து கொளுத்தினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், போலீசாரின் தொடர் விசாரணையில் சங்கர் ஆனந்திடமிருந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நகைகள் எங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்ற விவரத்தையும் சேகரித்து வருகின்றனர். சாகுல் ஹமீது மற்றும் சங்கர் ஆனந்திடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தையே பரபரப்பாகிய இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கைவிரல் துண்டாக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது.. கடலூர் மூவர் கொலையில் திடுக்கிடும் பின்னணி! - Cuddalore triple murder