அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விரகாலூர் கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் (கடை எண் - 6411) கடந்த ஜன.14 ஆம் தேதி அன்று இரவு வியாபாரம் முடிந்ததும், மேற்பார்வையாளர் ரமேஷ் கடையினை பூட்டி விட்டுச் சென்றார். மறுநாள் (ஜன.15) அன்று மதியம் 12.00 மணியளவில் டாஸ்மாக் கடையைத் திறக்க வந்த போது, டாஸ்மாக் கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில், 24 பெட்டிகளிலிருந்த 1152 மது பாட்டில்கள் திருடப்பட்டது இருந்தது தெரிய வந்தது.
திருடப்பட்ட மதுபானங்களின் மதிப்பு சுமார் 1 இலட்சத்து 49 ஆயிரத்து 760 ரூபாய் ஆகும். இது தொடர்பாக, கீழப்பழூவூர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் M கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவர் M.மனோகரின் வழிகாட்டுதலின் படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜின் உத்தரவின் படியும், அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் எம்.சங்கர் கணேஷின் மேற்பார்வையில், அரியலூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அதில், டாஸ்மாக் கடையினுடைய பாரின் இரவு காவலாளியைத் தாக்கி விட்டு, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்காவைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் தளபதி (வயது 34), மதுரை மாவட்டம், பேரையூர் தாலுக்காவைச் சேர்ந்த இருளாண்டி என்பவரின் மகன் மாரிமுத்து (19), தஞ்சாவூர் மாவட்டம், மணகரம்பை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் எபிநேசர் (30) ஆகிய மூவர் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.
இதனை அடுத்து தளபதி மற்றும் மாரிமுத்துவை இன்று (ஜன.26) கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 672 மதுபாட்டில்கள் மற்றும் 480 மது பாட்டில்களை விற்பனை செய்த தொகை 67 ஆயிரத்து 200 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 3 அரிவாள்கள், 2 கடப்பாரைகள் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள எபிநேசரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரியலூரில் பெண் கொலை: சிமெண்ட் ஆலை ஊழியர் கைது!