சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான 2 கோடியே 50 லட்சம் பாடப்புத்தகம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தினால் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாணவர்களுக்கான நோட்டுப்புத்தகமும் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் வட்டாரக் கல்வி ஒன்றியங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 2024-2025ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களை வட்டாரக் கல்வி ஒன்றியங்களில் இருந்து பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான வாகனப் போக்குவரத்துச் செலவிற்காக ஒரு கோடியே 33 லட்சம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வட்டாரக் கல்வி அலுவகங்களில் இருந்து பள்ளிக்கு எடுத்துச் சென்று வைக்க வேண்டும் என தொடக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களிடம் பாடப்புத்தங்களை வழங்கும்போது, போக்குவரத்து செலவினம் என எந்தத் தொகையும் வசூலிக்கக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே நிதி பெற்று வழங்கப்பட்டுள்ளது எனவும், பள்ளி திறந்த உடன் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நாேட்டுப் புத்தகம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.