மதுரை: மதுரை மாநகரில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் தாய் இறந்துவிட்ட தான் காரணமாக, தந்தையும் வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால் குழந்தைகள் இருவரும் தாயின் அக்கா(பெரியம்மா) வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுமியின் சகோதரர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுமி மட்டும் பெரியம்மா வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை கழிவறைக்குள் சென்ற சிறுமி, நெடுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை என கூறி அச்சிறுமியின் வளர்ப்பு பெற்றோர் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உடற்கூறாய்வின் முடிவுகளில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியை வளர்த்து வந்த பெரியம்மா மற்றும் பெரியப்பா ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சிறுமியின் பெரியப்பா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி, கணவனை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சிறுமியின் உடலை கழிவறைக்குள் அடைத்து வைத்து விட்டு, அக்கம் பக்கத்தினரை அழைத்து நெடுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை என்பது போல் அழுது நாடகமாடியுள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்ப்பதற்குள் இவர்களே சிறுமியை தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர பெரியப்பா கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணிபுரிந்து சுபேதாராக இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் சந்தேக மரண வழக்கை போக்சோ மற்றும் கொலை வழக்காகப் பதிவு செய்த கூடல்புதூர் போலீசார், கணவன்,மனைவி இருவரையும் போக்சோ நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தென்காசியில் திமுக Vs பாஜக இடையே தான் போட்டி: ஜான் பாண்டியன் கூறியது என்ன? - Tenkasi Candidate John Pandian