சென்னை: சென்னை பரங்கிமலையில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் இந்தியா மட்டுமல்லாது அதன் நட்பு நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிப்பவர்களுக்கு நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த ஓராண்டாக இந்த பயிற்சி மையத்தில் தங்கள் பயிற்சியை நிறைவு செய்த இந்தியாவை சேர்ந்த 258 ஆண் இராணுவ அதிகாரிகளுக்கும், 39 பெண் அதிகாரிகளுக்கும் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 15 அதிகாரிகளுக்கும் இன்று இறுதி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் ராணுவ துணைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டார். பின் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பாக செயல்பட்ட சாம்ரத் சிங்கிற்கு சிறப்பு வாள், சிம்ரன் சிங் ரதிக்கு ஓடிஏ தங்கப் பதக்கம், தனிஷ்கா தாமோதரனுக்கு வெள்ளிப் பதக்கம், தேவேஷ் சந்திர ஜோஷிக்கு வெண்கலப் பதக்கம் ஆகியவற்றையும் நினைவு பரிசாக வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பயிற்சி நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள் அவர்களுக்கான ஸ்டார் முத்திரைகளை தங்களது பெற்றோர்களின் கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டனர். பின்னர் ராணுவத்தில் பணியாற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது தேசிய கொடி நிறத்தில் பலூன் பறக்கவிடப்பட்டு, வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்திய ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு! 2 வீரர் வீரமரணம்! தொடரும் சோதனை!