சென்னை: சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 16 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இதையடுத்து, ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மூன்று நாட்கள் காவல் முடிவடைந்து, இன்று மூன்று பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஐந்தாவது அமர்வு முன்பு ஆஜர்படுத்தி உள்ளனர். முன்னதாக போலீஸ் காவலில் எடுத்த மூன்று பேரையும், போலீசார் அவர்கள் கொலைக்கான சதி திட்டம் தீட்டிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதிய தகவல்களும் பெறப்பட்டு அதில் வேறு யாராவது சம்பந்தபட்டுள்ளார்களா என்ற தகவல்களையும் பெற்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட மூவரிடமும் நீதிபதி விசாரணை செய்த பின், மீண்டும் வரும் இரண்டாம் தேதி வரை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்புடன் மூவரையும் பூந்தமல்லி கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: போலீசாரைக் கண்டதும் தப்பியோடிய சீசிங் ராஜா? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் டுவிஸ்ட்!