சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவரது வீட்டின் வெளியே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை செய்து வருகின்றனர்.
ரவுடி என்கவுண்டர்: இதனிடையே, போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம் (33), இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை மணலியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது ரெட்டேரி ஆட்டுச்சந்தை அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற திருவேங்கடம் போலீசிடம் இருந்து தப்பிச் சென்று புழல் வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்தார். அப்போது, காவல்துறையினர் அங்கு சென்று பிடிக்க முற்பட்டபோது, காவல்துறையினரை நோக்கி கள்ளத்துப்பாக்கியால் சுட்டதால் பதிலுக்கு காவல்துறையினர் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தனர்.
மாஜிஸ்திரேட் தீபா ஆய்வு: பின்னர், திருவேங்கடத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, புழல் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் நீதிபதி தீபா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, திருவேங்கடம் போலீஸ் பிடியில் இருந்து தப்பி வந்து கொட்டகையில் பதுங்கி இருந்தது எவ்வாறு? காவல்துறையினரை நோக்கி எவ்வாறு சுட முயன்றார்? காவல்துறையினர் மேற்கொண்ட பதில் தாக்குதல் எப்படி நிகழ்ந்தது? குற்றவாளிக்கு எங்கெங்கு குண்டு பாய்ந்தது, சம்பவம் நடைபெற்ற நேரம் என்ன, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தது எப்போது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தொடர்பாக காவல் ஆய்வாளர் மற்றும் அப்போது உடனிருந்த காவல்துறையினரிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.
உடல் தகனம்: அப்போது நீதிபதியின் ஆய்வு, விசாரணை ஆகியவை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் நீதிபதி தீபா முன்னிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடல் நள்ளிரவில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட திருவேங்கடம் உடல், தங்கசாலையில் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: எமர்ஜென்சி காலத்தில் மாற்றப்பட்ட கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!