சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்றைய முன்தினம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் அஞ்சலி செலுத்துவற்காக வைக்கப்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும், பொதுமக்களும் சமூக வலைத்தளங்கள் மூலமும், நேரில் சென்றும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இன்று பெரம்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் தமிழ் சமூகத்தை அறிவார்ந்த, ஒழுக்கம் நிறைந்த சமுதாயமாக உருவாக்க நினைத்தவர். அனைவரையும் சட்டம் படிக்க வைத்து பல வழக்கறிஞர்களை உருவாக்கியவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருந்தது இல்லை. ஆனால், மக்களின் நலன் குறித்து பல சமூக சேவைகளை செய்தவர்.
தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் மாநிலத் தலைவருக்கே பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது என்றால், பாமர மக்களின், பெண்களின் பாதுகாப்பு குறித்து எண்ணிப் பாருங்கள். இந்த வழக்கில் கொலை செய்ததாக சரணடைந்தவர்கள் நோக்கம் என்ன என்பதை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங்க் மறைந்தாலும், அவரது கனவு, அவர் செய்த சமூக முன்னெடுப்பு செயல்கள் என்றும் அழியாது” என உருக்கமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங்" - திருமாவளவன் புகழாரம்