மதுரை: பட்டியல் இன மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள 19 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக அருந்ததியர் சமூக மக்களுக்கு தமிழக அரசு 3 விழுக்காடு வழங்கியிருப்பதை அண்மையில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், இதுகுறித்த விவாதங்கள் நாடு முழுவதும் கிளம்பியுள்ளன.
இந்த தீர்ப்பு பரவலாக வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பட்டியல் சமூகத்தைச் சார்ந்த சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதன் சாதக பாதகங்கள் குறித்து 'அறிவுச்சமூகம்' அமைப்பின் தலைவர் தமிழ்முதல்வன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, "தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பட்டியலின இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மாநில அரசுகள் அவரவர் வசதிக்கு ஏற்றாற்போன்று உள் ஒதுக்கீடு வழங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளது. இதனை அறிவுச்சமூகம் வன்மையாக எதிர்க்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் போன்ற முன்னோர்களால் பட்டியல் சமூக மக்களுக்காக இட ஒதுக்கீட்டுக்கான கொள்கை முன்னெடுக்கப்பட்டு, பின்னாளில் அம்பேத்கரால் கொண்டு வரப்பட்டதாகும். இந்நிலையில், அருந்ததியர் சமூக மக்களுக்கான உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பது என்பது பட்டியல் சமூக மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியாகவே அறிவுச்சமூகம் கருதுகிறது.
இந்த உள் ஒதுக்கீட்டின் வாயிலாக இதர பட்டியல் சமூக மக்களுக்கான வாய்ப்புகள் பறிபோகும் சூழல் உள்ளது. வேலைவாய்ப்பில் மட்டுமன்றி, கல்வியிலும் இது எதிரொலிக்கும். ஆகையால், அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு என்பது முறையற்றதாகும்.
அண்மையில்கூட தமிழக அரசு அனைத்து மாநகராட்சிகளிலும் உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்பியது. அதில், 146 பணியிடங்களில் அருந்ததியினருக்கு 3 விழுக்காடு என்ற அடிப்படையில் அதிகபட்சம் 4 இடங்கள் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மீதமுள்ள பட்டியல் சமூக மக்களுக்கு 21 இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக, அருந்ததியினர் சமூகத்திற்கு 17 இடங்களும், மீதமுள்ள பட்டியல் சமூகத்தினருக்கு 14 இடங்களும் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், இந்த உள் ஒதுக்கீட்டில் 3 விழுக்காட்டையும் தாண்டி 10 விழுக்காடு அவர்கள் பெற்றிருப்பதையும் இது காட்டுகிறது. இது பட்டியலின மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியாக உள்ளது.
மேலும், தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 25 விழுக்காட்டிற்கும் மேல் பட்டியல் சமூகத்தினர் உள்ளனர். 25 விழுக்காட்டிற்கும் மேல் உள்ள பட்டியல் சமூகத்தினர் ஒன்று சேர்ந்தால் பெரிய மாற்றம் ஏற்படும். இதனை சிதைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உள் ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னாள் முதல்வர் கருணாநிதி மிக தந்திரமாக செயல்படுத்தினார்.
ஆகையால், உள் இட ஒதுக்கீட்டு முறையைக் கைவிட்டு, பின்தங்கியுள்ள சமூகங்களை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வ வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். எனவே, இதனைக் கண்டித்து அறிவுச்சமூகம் வரும் காலங்களில் தமிழகத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாஜக அரசு பட்டாசு தொழிலுக்கும் வெடி வைத்துள்ளது.. எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு!