திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவருக்கு சாமுண்டி சாமியார் மற்றும் ராஜா என இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சாமுண்டி சாமியார் கடந்த 1988ஆம் ஆண்டு அரசுக்குச் சொந்தமான இடத்தில், தன்னுடைய சொந்த செலவில் வெற்றிவேல் முருகன் கோயில், நாடக மேடை மற்றும் இரண்டு கடைகளை கட்டியுள்ளார்.
இந்த கோயிலின் வாரிசுதாரர்களாக சாமுண்டி சாமியார் அவருடைய அண்ணணான ராஜா மற்றும் அவருடைய மனைவி லட்சுமி அம்மாளுக்கு உயில் எழுதி கொடுத்துள்ளார். பின்னர், கடந்த 2002ஆம் ஆண்டு சாமுண்டி சாமியார் உயிரிழந்த நிலையில், கோயில் நிர்வாகம் ராஜா குடும்பத்தினரால் கவனிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோயிலின் அருகில்தான் பரம்பரை பரம்பரையாக ராஜா குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இவர்கள் வேறொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், இங்கே இருக்கக்கூடாது என சிலர் அவர்களை தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ராஜா குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், ரவி உள்ளிட்ட சிலர் திடீரென கோயிலில் இருந்த மின்சார இணைப்புகளை துண்டித்துள்ளனர். மேலும், நாடக மேடையையும், அதேபோல் இரண்டு கடைகளையும் அடித்து நொறுக்கி உள்ளனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜா குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
மேலும், அதன் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால், இன்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது நாட்றம்பள்ளி போலீசார் இதற்கு முன்பே புகார் அளித்துள்ளீர்கள், நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளீர்கள் எத்தனை முறை தான் புகார் அளிப்பீங்க, திரும்பவும் இங்கு வந்து உள்ளீர்கள், அங்கேயே நில்லுங்கள் திரும்பவும் நாளை வாங்க என்று கூறியதாக தெரிகிறது.
இதன் காரணமாக போலீசாருக்கும், ராஜா குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெளியே நிற்க வைத்து அவர்களிடமிருந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் உடலை BSP அலுவலகத்தில் அடக்கம் செய்ய கோரிய மனு; இன்று இரவே விசாரணை? - Armstrong Murder Case