சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் புதிய சிற்றுந்து திட்டம் - 2024 குறித்த கருத்து கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. உள்துறை செயலாளர் தீரஜ் குமார், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள், சிற்றுந்து உரிமையாளர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறும்போது, "சென்னையில் சிற்றுந்துகளை இயக்கினால் அவற்றை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இயக்க வேண்டும். சென்னையில் 8 மண்டலங்களில் தனியார் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், அப்பகுதியில் 1,700 மாநகரப் பேருந்துகள் மூலம் 17,000 நடைகள் இயக்கப்படுவதால் அவற்றை பேருந்து போக்குவரத்து சேவையுடைய பகுதி என்று அறிவிக்க வேண்டும்.
சென்னை புறநகர் பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில், சிற்றுந்துகளை தமிழகத்தின் பிற பகுதிகளில் 25 கி.மீ இயக்கினாலும், சென்னையில் 6 முதல் 8 கி.மீ தூரமே இயக்க அனுமதிக்க வேண்டும். சிற்றுந்துகளில் GPS பொருத்தப்பட்டாலும் அவற்றை கண்காணிக்கும் தொழில்நுட்பம் தற்போது எம்டிசி (MTC) வசம் இல்லை" என தெரிவித்தார்.
சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் கூறும்போது, "பேருந்துகளில் 60 சதவீத பயணிகள் புறப்படும் இடத்தில் இருந்து 8 கி.மீக்கு உள்ளாகவே ஏறுகின்றனர் என்பதால் சிற்றுந்துகளை 8 கி.மீ வரை பேருந்து வழித்தடத்தில் இயக்க அனுமதித்தால் அரசுப் பேருந்துகளின் வருவாய் பாதிக்கப்படும். சேரும் இடங்களின் அருகே முக்கிய நிறுத்தங்கள், மருத்துவமனைகள் இருந்தால் கூடுதலாக 1 கி.மீ தூரம் சிற்றுந்தை இயக்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தக் கூடாது" என தெரிவித்தார்.
ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஆறுமுகம் கூறும்போது, "சிற்றுந்து பேருந்து சேவை குறித்த தற்போதைய அறிவிப்பால் உரிய வேலை கிடைக்காமல் சென்னையில் சேர் ஆட்டோக்களை இயக்கி வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பேருந்து நிலையத்திற்கு உள்ளே வர சிற்றுந்துகளை அனுமதிக்கக் கூடாது. அவற்றின் கட்டணங்களை வரையறை செய்ய வேண்டும்" என்றார்.
சிற்றுந்து சேவை விரிவுபடுத்தப்பட்டால் ஆட்டோ, மேக்சி கேப் உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆட்டோ தொழிலாளர் சங்கமும் கூறிய நிலையில், ஆட்டோ குறித்தெல்லாம் இங்கு பேசக் கூடாது.
சிற்றுந்து குறித்துதான் பேச வேண்டும் என கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற சிற்றுந்து உரிமையாளர்கள் எழுந்து நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இருதரப்பும் சமரசம் செய்யப்பட்டு தொடர்ந்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற சிற்றுந்து உரிமையாளர்கள் கூறியதாவது, "27 ஆண்டுகளாக விடிவுகாலம் பிறக்காதா என காத்திருந்து சொத்துகளை இழந்து, நகைகளை அடகு வைத்து சிற்றுந்துகளை இயக்கி வருவதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் ரூ.22 க்கு விற்ற போது வசூலிக்கப்பட்ட கட்டணமே தற்போதும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கிராம மக்களை மட்டுமின்றி ஆடு, மாடுகளை கூட சிற்றுந்துகளில் அழைத்து செல்கிறோம். நகரங்களுக்குள் செல்லும் சிற்றுந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களை போக்குவரத்து அதிகாரிகளை மரியாதையின்றி நடத்துவதாக குற்றம் சாட்டினர்.
சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்களில் தனியார் சிற்றுந்துகளை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் மண்டலங்களை அடிப்படையாக வைத்து சிற்றுந்துகளை அனுமதிக்காமல் பேருந்து நிலையங்களை அடிப்படையாக வைத்து அனுமதிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
இறுதியாக, பேசிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார், சிற்றுந்து உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினரின் கருத்துகளையும் பொதுமக்களின் பிரச்னைகள், தேவைகளையும் அறிந்து அரசு உரிய முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆன்லைனில் கட்டட அனுமதி; புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! - Online Building permit