மதுரை: தீபாவளி அன்று வெடி விபத்துகளால் கண்கள் பாதிக்கப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் எண்ணிக்கை 104 பேர். அவர்களில் 10க்கும் மேற்பட்டோர் கரு விழியில் பாதிப்பு (Corneal Tear) ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேலும் நான்கு பேருக்கு, முற்றிலும் கண் பார்வை பாதிக்கப்பட்டு கண்கள் எடுக்கப்பட்டன (Enucleation). அந்த நான்கு பேரும் குழந்தைகள் என்பது மிகவும் வருத்தமளிப்பதாக அரவிந்த் கண் மருத்துவமனை நேற்றைய தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் முதன்மை மருத்துவ அதிகாரி மருத்துவர் கிம் கூறுகையில், “அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் தீபாவளிக்கு பல நாட்கள் முன்பே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கேரள ரயில் விபத்தில் இறந்த தமிழக தூய்மை பணியாளர்களின் உடல் சொந்த ஊரில் தகனம்..
இருந்த போதிலும், இந்த முறை தீபாவளியின் போது நேர்ந்த விபத்தின் காரணமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் மட்டும் 104 பேர் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள எங்களது மற்ற கண் மருத்துவமனைகளையும் சேர்த்து மொத்தம் 266 பேர் இந்த முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் நான்கு குழந்தைகள் கண்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு அவை அப்புறப்படுத்தப்பட்டன எனும் போது, மிகுந்த வேதனையாக உள்ளது. பெற்றோரும், உறவினர்களும் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது அதிக எச்சரிக்கையுடன் உடனிருந்து கவனிக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். மேலும், இது குறித்த பரந்துபட்ட விழிப்புணர்வு அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்