ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில், நிதி உதவி தொடக்கப்பள்ளியில் உள்ள 185வது வாக்குச்சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக எழுந்த புகாரின் பேரில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, வாக்குச்சாவடி மையத்தின் நுழைவாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதியின் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவானது தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
இந்நிலையில், நேற்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களும், வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் வாக்களித்தனர். அந்தவகையில், மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் 185வது வாக்குச்சாவடி உள்ளது. இதில், 542 பேர் வாக்களித்து கொண்டிருந்த நிலையில், இறந்து போனவர்கள் மற்றும் வெளியூர் காரர்கள் என சிலரின் ஓட்டை கள்ள ஓட்டாக பதிவு செய்ததாக புகார் எழுந்தது.
பாமக பூத் ஏஜெண்ட்கள் எழுப்பிய இந்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்த அரக்கோணம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும்; இதனால், இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்காததால் திடீரென சக நிர்வாகிகளுடன் வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலை முதல் தனக்கு ஏராளமான பொதுமக்கள் வாக்களித்து வருவதாகவும்; ஆனால், பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தோல்வி பயத்தில் திமுகவினர் தேர்தல் விதிமீறல் வேலைகளை ஆரம்பித்ததாகவும், வாக்குச்சாவடியை கைப்பற்றி இறந்தவர்கள் ஓட்டு, வெளியூர் சென்றவர்கள் ஓட்டு என 100-க்கும் மேற்பட்ட கள்ள ஓட்டுகளைப் போட்டதாகவும் குற்றம்சாட்டினார். அதோடு, மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் முறைகேடு நடைபெற்று இருப்பது ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, மறுவாக்குப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேங்கைவயலில் தேர்தலைப் புறக்கணித்த மக்கள்! க்ளைமாக்ஸ் என்ன? - Lok Sabha Election 2024