வேலூர்: நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய பாமகவிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது, பாஜக. இதனையடுத்து, தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாமக. இதில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் பாலு போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கட்சித் தலைமை அவரை வேட்பாளராக அறிவித்ததைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவை அவர் பெற்று வருகிறார். அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி கரசமங்கலத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்குரைஞர் பாலு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
பாமக கிழக்கு மாவட்டச் செயலாளர் இளவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு பேசுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், இதுவரையில் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை.
நான் வெற்றி பெற்றால், நகரி திண்டிவனம் ரயில் பாதை பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். அரக்கோணத்தில் ரயில்கள் அனைத்தும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். மக்களுக்கு ஜெகத்ரட்சகன் என்ன செய்தார் என்பதை பொது மேடையில் வாக்காளர்கள் முன்னிலையில் என்னுடன் விவாதிக்கத் தயாரா?” என பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக வேட்பாளர் பாலு பேசுகையில், “அரக்கோணம் தொகுதியில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, மீண்டும் போட்டியிடக்கூடிய ஜெகத்ரட்சகன் மீது பொதுமக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அவரை ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பார்க்கவே இல்லை, எங்களுடைய தொகுதி பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதில்லை எனக் கூறுகின்றனர். இப்படி போன்றவர் மீண்டும் எப்படி வாக்கு கேட்க வருவார்? வந்தால் அவரை விரட்டி அடிப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நாடாளுமன்றத்தில் பேசியதில்லை என மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
இந்த தருணத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அரக்கோணம் நாடாளுமன்றத்தில் போட்டியிடுகிறேன். கூட்டணி கட்சி நிர்வாகிகள் எனக்கு சிறப்பாக ஒத்துழைப்பு தருகின்றனர். நான் வெற்றி பெற்றால், இந்த பகுதியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பல்வேறு திட்டங்களை இப்பொழுதே தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் பத்திரிகையாளர்கள் முன்பாக, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தெளிவான விளக்கத்தை நான் தர இருக்கிறேன். இந்த தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கின்றேன். மது ஆலை நடத்தக்கூடிய அதிபர், இந்த அரக்கோணம் தொகுதிக்கு வேண்டுமா?
மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து போராடக்கூடிய, நீதிமன்றத்தின் மூலமாக போராடி 90 ஆயிரம் மதுக்கடைகளை இந்தியா முழுவதும் மூடிய ஒரு வழக்கறிஞர் உங்களுக்கு வேண்டுமா? என்ற கேள்வியை பகுதி மக்கள் முன்பாக வைக்கின்றேன்” என கூறினார்.
இதையும் படிங்க: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Viluppuram Lok Sabha Constituency