புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், கஞ்சா உபயோகித்த 2 பேர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதுச்சேரியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெருகி வரும் போதைப்பொருள்களைக் கட்டுபடுத்த, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, போதைப்பொருட்களை ஒழிக்க கோரி பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போதைப்பொருள் பயன்பாட்டை கண்காணிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கஞ்சா பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க 'ஆபரேஷன் விடியல்' தொடங்கப்பட்டு, கஞ்சா விற்போர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்க,ள் பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்தே கொண்டு வரப்படுகிறது எனவும், புதுச்சேரிக்கு வரும் கூலித் தொழிலாளிகள், வடமாநிலத்தவர் உதவியுடன் ரயில் மூலம் புதுச்சேரி கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். ஆய்வாளர் தனசேகர், உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் மற்றும் ரயில்வே போலீசார், மோப்ப நாய் பைரவம் உதவியுடன் சோதனை நடத்தினர்.
ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சோதனை செய்ததில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஆனால், ரயிலில் வந்த கூலித் தொழிலாளர்கள் சிலரிடம், பண்டல் பண்டலாக போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போதை பாக்குகள் கொண்டு வந்தவர்களை போலீசார் கைது செய்து, காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: “சூர்யமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி பதில்!