விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூரில் கிராம நிர்வாக அலுவலகராக தனவேல் (வயது 31) என்பவரும், கிராம உதவியாளராக ஏழுமலை என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் சிங்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அனைத்து அரசு பணிகளுக்கும் லஞ்சம் வாங்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் தன்னுடைய நிலத்திற்குப் பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் தனவேல் மற்றும் உதவியாளர் ஏழுமலை ஆகியோரை அணுகியுள்ளார். அப்போது அவர்கள் "பட்டா மாற்றும் அதிகாரியிடம் நான் பேசிக்கொள்கிறேன். அதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும்" என கூறியதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத விவசாயி முருகன் இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை விவசாயியிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் நேற்று மதியம் 2 மணியளவில் விவசாயியிடம் அப்பணத்தை கிராம நிர்வாக அலுவலர் தனவேல் லஞ்சமாக வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யராஜ், இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரி, அருள்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி உள்ளிட்ட போலீசார் விஏஓ தனவேல் மற்றும் கிராம உதவியாளர் ஏழுமலையை கையும் களவுமாக பிடித்து, அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது லஞ்சம் வாங்கிய சிங்கனூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "ஊர் தலைவர்கள் பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர்" - திமுக பஞ்சாயத்து தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு! - panchayat president issue