சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ந.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஜூன் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணியை விட சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.
இதனிடையே கடந்த ஜூலை 14ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டப்பேரவைத் தலைவர் அறையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவை சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை மற்றும்உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன் பிறகு, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, "இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் சட்டமன்ற பதவியேற்று கொண்டேன். இது தமிழக முதலமைச்சரின் மூன்றாண்டு சாதனைக்கு கிடைத்த வெற்றி. எனது தொகுதி மக்களுக்கு வேண்டிய பணிகளை உடனடியாக செய்வேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லாமல், வாக்களிக்காதவர்களுக்கும் உண்டான அடிப்படை வசதிகளை செய்து தருவேன்". என்றார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு மின் கட்டண உயர்வு! அன்புமணி ராமதாஸ் விமர்சனம் - ELECTRICITY BILL INCREASED