சென்னை: பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்று ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பகுஜன் சமாஜ் கட்சியில் 20 ஆண்டுகளாக மாநிலத் தலைவராக இருந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நம்மை விட்டு பிரிந்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை; அமித்ஷாவிடம் சிபிஐ கோரிக்கை: தமிழ்நாட்டில் இது போல் நடந்தது இல்லை, ஒரு அரசியல்வாதி யை அவரது வீட்டின் வெளியே கூலிப்படையினரைக் கொண்டு கொலை செய்துள்ளார்கள். தமிழ்நாடு பாஜக சார்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைக்க உள்ளோம்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை (Armstrong Murder case) சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வோம். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு யார் காரணம்? என்பதைக் கண்டறிய வேண்டும். சென்னை கூலிப்படையின் தலைநகராக மாறி உள்ளது.
பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில் தான் சென்னை இருக்கிறது. சென்னையில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற பிறகும் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகம் காட்டவில்லை; இன்னும் ஆமை வேகத்தில் தான் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு; மாயாவதி கூறியது சரியே: தமிழ்நாட்டில் கூலிப்படைக்கு இடமில்லை என்ற நிலை வரவேண்டும். ஜெயிலில் இருந்து ரவுடிகள் யார் வெளியே வருகிறார்கள், அதன்பிறகு, அவர்கள் என்ன செய்கிறார்கள்? என காவல்துறை கண்காணிக்கவில்லை. காவல்துறையினர் பிரபலமான வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு கொலை செய்த நபர்களை சரண்டர் ஆக சொல்லுங்கள் எனக் கூறும் நிலை தான் உள்ளது. மாயாவதி கூறியது போல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. மேலும் அவர் கூறியது போல் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்.
'காவல்துறையிலும் கருப்பு ஆடுகள்' - அண்ணாமலை: காவல்துறையிலும் கருப்பு ஆடுகள் உள்ளது, முதலமைச்சர் இந்த வழக்கை தாமாவே சிபிஐக்கு கொடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ளவர்களுக்கு அழுத்தம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான கொலை சம்பவங்களும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. திமுகவின் கைபாவையாக சில காவல்துறை அதிகாரிகள் மாறிவிட்டனர்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எத்தியோப்பியாவில் இருந்து ரூ.10 கோடி மதிப்புடைய கொக்கைன் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்! - Cocaine seized