திருப்பூர்: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்லடம், காட்டூர் பகுதியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டபோது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சில வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட முறையில் வெளியுறவுத்துறை அமைச்சரகத்தில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் சில விஷயம் கேட்டிருந்தேன்.
அந்த வகையில், கச்சத்தீவு யாரால் கொடுக்கப்பட்டது? கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் மீனவ குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கைதாவதும், பிறகு அரசியல் கட்சிகள் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
1968ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தி, இலங்கையுடன் கச்சத்தீவை தாரை வார்ப்பது குறித்து சீக்கிரட் டீல் போடப்பட்டது. அதன் பிறகு, 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து, இதுவரை பொதுவெளியில் இல்லாத இரண்டு முக்கியமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன்படி, 1968-இல் தகவல் தெரிவிக்கும் ஆலோசனைக் குழுவின் கூட்டம், 1974-இல் வெளியுறவுத் துறைச் செயலர் மற்றும் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவைப் பற்றிப் பேசியது ஆகிய இரண்டு தகவல்களையும் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.
இந்த தகவலை எந்த இந்தியக் குடிமகன் படித்தாலும் ரத்தம் கொதிக்கும். அந்த அளவிற்கு, காங்கிரஸ் சதிவேலைகளை செய்து கச்சத்தீவை தாரை வார்த்துள்ளார்கள். கச்சத்தீவு இந்தியாவில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த கச்சத்தீவு இரண்டு நாடுகளுக்கும் மிக முக்கியமான தீவாக கருதப்பட்டது. அதிலும் குறிப்பாக, இந்தியாவைப் பொறுத்தவரையில், கச்சத்தீவு மிக முக்கியம். ஏனென்றால், ஒரு நாட்டின் எல்லைப்பரப்பை தீர்மானிக்கக்கூடிய ஒன்று. ஆகவே, கச்சத்தீவைக் கொடுப்பதன் மூலம், நமது எல்லை பரப்பை நாமலே சுருக்கிக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பேசிய அவர், "இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேரு, 1961-இல் கச்சத்தீவு குறித்து பைல் நோட்டிங் எழுதியுள்ளார். அதில், 'இந்த குட்டித்தீவுக்கு நான் எதையும் செய்யப்போவதில்லை. ஆகவே, இதனை எந்த பிரச்னையும் இன்றி விரைவில் இன்னொருவருக்குக் கொடுக்கப்போகிறேன்' என்று கூறியுள்ளார்.
இதனையெல்லாம் தாண்டி, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கச்சத்தீவுக்கு செய்த துரோகம் குறித்தும், கருணாநிதியை, வெளியுறவுத் துறைச் செயலர் சந்திக்க வந்தபோது என்ன பேசினார், அப்போது கருணாநிதி பேசியதை பைல் நோட்டாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து நாளை வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஓசூரில் பாஜக அமைச்சரின் உதவியாளர் மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு...1.20கோடி ரூபாய் பறிமுதல்!