தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தேரடியில் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 30) பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின்போது ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி தனித்து நிற்கிறார், தெளிவற்ற அரசியலுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். இன்றைக்கு நம் கண் முன் நிற்கிற ஒரே தலைவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி தான், அவரே அடுத்த பிரதமர்” என்று பேசியுள்ளார்.
பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, "பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை தஞ்சையின் பக்கம் திரும்பி இருக்கிறது, நாடாளுமன்றத்தில் தமிழ் பாரம்பரியச் சின்னமான செங்கோலை நிறுவி இருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் போலி விவசாயியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு, டெல்டாகாரன் என்ற பெயரை மட்டும் பயன்படுத்துகிறார். காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகிக்கும்போது மீத்தேன் எடுப்பதற்கு கையெழுத்து போட்டவர் டெல்டாகாரரா? மணல் திருடுவதை ஊக்குவித்தால் டெல்டாகாரரா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருக்கும் வரை காவிரியில் பிரச்னை இல்லை, தடுப்பதற்கு அங்கு யாருக்கும் தைரியம் இல்லை. திமுகவிற்கு யாராவது ஓட்டு போடுகிறீர்கள் என்றால், நீங்கள் போடும் ஓட்டால் என்ன பிரயோஜனம் என யோசித்து பார்க்க வேண்டும். அடுத்த முறை பிரதமராக மோடி வரும்போது, மறுபடியும் நாம் இருக்க வேண்டாம் என்பதற்காகதான், தஞ்சாவூர் எம்பி பழனிமாணிக்கம் மரியாதையாக ஒதுங்கிக் கொண்டார்.
கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் வராததால், 3 லட்சம் டன் நெல் கொள்முதல் மகசூல் குறைந்திருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை காவிரியில் முறையாக தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், இருவருமே பிற்போக்குத்தனமான அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” என சாடியுள்ளார்.
இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.