சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் இன்று நடைபெற்றது. அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதுவரை ஆறு கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. 486 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளது.
இந்த ஆறுகட்ட வாக்குப்பதிவைப் பார்க்கும்போது பாஜக தனிப் பெரும்பான்மையுடனும், அதிக எண்ணிக்கையுடனும், குறிப்பாக 370 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். அதற்கான கால சூழல் நன்றாக இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் சேர்த்து 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். கடந்த பத்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த மோடியை, மறுபடியும் ஐந்தாண்டு காலம் மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள். பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சேர்ந்து தமிழகத்தில் இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றியைப் பெறும்.
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, அரசியலில் டெபாசிட்டை இழந்த மனிதர் என்ற அனுபவம் தான் உள்ளது. நான் இருக்கேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக இதுபோன்று பேசி வருகிறார். பிரகாஷ்ராஜை ஒரு நடிகராக மதிக்கிறேன், ஆனால் அரசியலில் அவரை நான் மதிப்பது இல்லை, அவருடைய அனுபவம் என்பது அவ்வளவுதான். மோடியைத் திட்டுவதற்காக தான் பிரகாஷ்ராஜை வைத்துள்ளார்கள்.
விசிக தலைவர் திருமாவளவன் பொறுப்புடன் பேச வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பேச வேண்டும். இந்தியாவிலேயே மோடி பிரதமராக இருக்கும்வரை மாற்றுக் குரலாக இருக்கும் எந்த நபராக இருந்தாலும் அவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. திமுகவினரைப் போல் இரண்டு மணிக்கு, மூன்று மணிக்கு வீடு புகுந்து கருத்துரிமையை நசுக்கும் செயலில் நாங்கள் ஈடுபடமாட்டோம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்துத்துவாவை ஆதரித்தார். பலமுறை இந்தத்துவாவிற்காக குரல் எழுப்பியுள்ளார். இந்துத்துவா என்பது ஒரு மதம் மட்டும் அல்ல, அது ஒரு கலாச்சாரம், பண்பாடு என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்துத்துவா என்பதை அனைவரையும் அரவணைப்பது என்றுதான் பார்க்கிறேன்" என்று அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: டின்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு: வெளியான முக்கிய அப்டேட்! - TNPSC GROUP 4 EXAM LATEST UPDATE