கோயம்புத்தூர்: கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருப்பதாக இருந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் மாவட்ட தோ்தல் அலுவலா் கிராந்தி குமாா் பாடி அனுமதி வழங்கி உத்தவிட்டாா். இதையடுத்து திட்டமிட்டபடி புத்தக வெளியீட்டு விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
கோவை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில், ‘ப்ரொபஷனல் இன் பாலிடிக்ஸ்’ (Professional in Politics) என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கபட்ட நிலையில், இந்த நிகழ்விற்கு உதவி தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்திருந்தார்.
இதனையடுத்து,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தர்மராகவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்த உத்தரவை தேர்தல் நடத்தை விதிகளின்படி, மறுபரிசீலனை செய்து சனிக்கிழமை பிற்பகலுக்குப் பின் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என விளக்கம் அளித்தார்.
-
Delighted to have had the opportunity to talk about “Professionals In Politics”, a program conducted by @SMaRT4Bharat today in Coimbatore, and to share my views on the need for professionals in the political landscape in shaping the developed India of tomorrow envisioned by our… pic.twitter.com/ppVO2l7j3j
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 6, 2024
அதனைத்தொடர்ந்து, அனுமதி மறுத்த உத்தரவை, மறுபரிசீலனை செய்து புதிய உத்தரவை தேர்தல் அதிகாரி பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி நேற்று உத்தரவிட்டு இருந்த நிலையில், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்தி குமார் பாடி நேற்று பிற்பகல் இந்நிகழ்விற்கு அனுமதி வழங்கி புதிய உத்தரவு வழங்கினார். புதிய உத்தரவில், “புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்தும் செலவுகள் பாஜக வேட்பாளரின் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு அனுமதியானது வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி நிகழ்ச்சியானது, நேற்று மாலை 4.30 மணிக்கு கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ஊடகவியலாளர்கள் பத்ரி சேஷாத்ரி, ரமேஷ், ரங்கராஜ் பாண்டே, முரளி ஆகியோர் பங்கேற்று, "ஜடியா கால்டு மலை" என்ற புத்தகத்தை தமிழ், ஆங்கிலம் என இருமொழியிலும் வெளியிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நுணுக்கமாக கவனிக்கப்படுகிறது. கோவையின் வேட்பாளராக இருப்பதால் நான் அரசியல் பேச முடியாது. தற்போதைய அரசியல் களம் வேகமாக வளரும். துறையின் நிபுணர்களால் தான் துல்லியமான முடிவுகள் எடுக்கப்படும்.
பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை வகுத்துள்ளார். அதற்கு திறமையான நபர்கள் தேவைப்படுகிறது. வித்தியாசமாக சிந்திக்கும் தலைவர்களுக்கு பிரதமர் முக்கியதுவம் கொடுக்கிறார். இளைஞர்களை நோக்கி அரசியல் நகர்ந்துள்ளது. முன்பு, அரசியல் முகநூலில் இருந்தது. தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கம் அரசியல் உள்ளது.
பிரதமரின் இலக்கு மிகப்பெரியது. அதில் தமிழ்நாட்டின் பங்கு இருக்கவும், பிரதமர் விரும்புகிறார். சாதி, கூட்டணி போன்றவைகளை உடைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். தேர்தலில் சாதி இருப்பதால், படித்தவர்களுக்கு இடம் இல்லாமல் இருந்தது என்றார். 99.99 சதவிகித தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிடடுபவர்கள் அந்த பகுதியின் உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அரசியல் என்பது விவாத மேடை கிடையாது. ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவர் என்பதை அரசியலில், கட்சியில் இருக்கும் நாம் உணர வேண்டும். 5 வருட அரசியல் தொண்டராக முதலில் செயல்படுங்கள். பின்னர், அதன் படிநிலையை உயர்த்துங்கள். தொழிலில் சாதித்த பிறகு அரசியலுக்கு வரவேண்டும் என நினைப்பவர்கள் முதலில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சாதாரண உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
அதன் பிறகு பொறுப்புக்கு வர வேண்டும். நேரடியாக பொறுப்புக்கு வரும்போது சில அசௌகரியங்கள் ஏற்படும்.
துறை சார்ந்த வல்லுனர்கள் சாதிப்பது அதிகம். பிரதமர் மோடி மற்றும் பியூஷ் கோயல் போன்றவர்கள் கட்டமைத்து வரும் இந்தியா மிகவும் முக்கியமானது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா வேகமாக வளர்ந்து வந்துள்ளது.
பிடித்த அரசியல் கட்சியில் பயணியுங்கள். அதில் முன்னேற்றி வாருங்கள்” என்றார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி! - MK Stalin Tribute To Pugazhenthi