சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் வழங்குவதற்கான மையம், கடந்த 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடி செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, “அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரிகளில் மொத்தம் 52 ஆயிரத்து 500 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். இணைப்புக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும்போது பேராசிரியர்கள் விபரங்களை ஆய்வு செய்வோம். பேராசிரியர்கள் விபரங்களை ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்தோம். அப்போது தகவல்கள் சரியாக இருந்தது. தன்னார்வ நிறுவனம் அளித்த தகவல் அடிப்படையில் பிறந்த தேதியை வைத்து ஆய்வு செய்த போது, 52 ஆயிரத்து 500 பேராசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 2 ஆயிரம் பேர் குறைவாக இருப்பதை கண்டுபிடித்தோம்.
500க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல கல்லூரியில் பணியாற்றுவதாக தவறான தகவலை அளித்துள்ளனர். அவர்கள் மீதும், அந்த கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களில் ஒரே பேராசிரியர் 32 கல்லூரிக்கு சென்றுள்ளார். அவர் ஆதார் எண் மாற்றம் செய்து தந்துள்ளார். இந்த முறைகேட்டை பேராசிரியர்களின் பிறந்த தேதி அடிப்படையில் கண்டுபிடித்தோம். மேலும் விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கிய கல்லூரியில் பணியாற்றிவரும் பேராசிரியர்களின் விபரங்களையும், அவர்களின் பிறந்த தேதி அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம். மேலும் விரிவான விசாரணை மேற்கொள்வதற்கு குழு அமைக்கப்படும்” என்று துணைவந்தர் வேல்ராஜ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரணை செய்ய குழு அமைக்கப்படுகிறது. தொழில்நுட்பக் கல்வி இயக்க ஆணையர் ஆப்ரகாம், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் குமாரவேல், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் உறுப்பினராக தேசிய பேராசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உஷா நடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கு 2023-24ம் கல்வியாண்டில் 91 கல்லூரியிலும் 600க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், 2024-25ம் கல்வியாண்டில் 124 பொறியியல் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் போலியாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை அளித்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்தபோது அளித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் மீண்டும் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அதன் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் குழுவினர் ஆய்வுசெய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு துவங்க உள்ள நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பும் எனவும் தெரிகிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைவு அங்கீகாரம் வழங்கும் விவகாரம் குறித்து முன்னாள் துணைவேந்தர் சூரப்பா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என்னுடைய காலத்திலேயே அங்கீகாரம் பெறுவதற்காக முறைகேடாக பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளில் பதிவு செய்த கல்லூரிகள் குறித்த விவரம் தெரியவந்தது. அப்போது கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கிட அப்போதைய இயக்குநர் இந்த முறைகேடு தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்தார்.
அதன் அடிப்படையில் கல்லூரிகளின் ஆதார் எண்கள் மற்றும் பான் எண் உடன் இணைக்கப்பட்டதுடன், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் வழங்கிய ஐடி எண்ணும் இணைக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் முறைகேடில் ஈடுபட்ட ஒரு கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. சில கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில்; இந்த ஊர்களில் எல்லாம் நிற்கும்! - trichy tambaram spl train