ராணிப்பேட்டை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் உதவியாளர் திருமணம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி செளமியா அன்புமணி பங்கேற்று தாலி எடுத்துக் கொடுத்து சீர்திருத்த முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தனர் .
பின்னர் அவர் பேசியதாவது, "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அந்தப் பக்கம் கூட்டணி சென்று இருந்தால் வென்றிருக்க முடியும் என்று சிலர் சொல்வார்கள். அந்தப் பக்கம் சென்றிருந்தாலும் வென்றிருக்க முடியாது. அவர்கள் ஓட்டு நமக்கு வராது. நம்முடைய சொந்த காலில் நாம் நிற்க வேண்டும். களத்தில் இருப்பது நாம் மட்டுமே. நம்முடைய கட்சியிலேயே அதிக இளைஞர்கள் மற்றும் தங்கைகள் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக சூழ்ச்சி செய்தும் பணம் மற்றும் அதிகார பலத்தால் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் அது நடக்காது. 2026-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாமக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இந்த உள்ளாட்சி தேர்தலில் பாமகவினர் சேர்மன் பதவிகளை அதிக இடங்களில் கைப்பற்ற வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் அதிக கவுன்சிலர்களை பாமக பெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2 வாரத்துக்கு முன்னே வந்து அனைவரும் பிரச்சாரம் செய்ய வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தருவதாக திமுகவினர் துரோகம் செய்து வருகின்றனர். இடைத்தேர்தல் வரும் போது இட ஒதுக்கீடு தருவதாக சொல்வார்கள்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும். நம்முடைய ஒற்றுமை இன்னும் வரவில்லை. அந்த ஒற்றுமை விரைவில் வரவேண்டும். உங்களின் முன்னேற்றத்திற்காகவே பாமக வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். நமக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லாதது. சுகாதார அமைச்சராக இருந்த நான் சொல்கிறேன். இங்கு நீட் தேர்வு தேவையில்லை. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
அவர்களை கருப்பு புள்ளி பட்டியலில் வைக்க வேண்டும். போலீசாருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணிப்பு செய்தாலும், செய்யாவிட்டாலும் பாமகவுக்கு இந்த இடைத்தேர்தல் சாதகமாகவே இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: ஸ்மாட் போன் முதல் ரயில் பாதை வரை..செயல்வீரர்கள் கூட்டத்தில் கோரிக்கைகளை அடுக்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா! - TRP Rajaa requested to railway line