சென்னை: நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தேனி நகரத்திற்கு புறப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து, அடுத்த சில நிமிடங்களில் பிரேக் பிடிக்காமல் சாலையோரத்திலிருந்த இனிப்புக் கடை மீது மோதியது. இதனால் அந்தப் பேருந்து அங்கிருந்த இனிப்புக் கடையை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. இந்த விபத்தில் இனிப்புக்கடை முழுமையாக சேதமடைந்தது மட்டுமின்றி, கடையிலிருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக போக்குவரத்துக் கழகத்தை நோக்கி பல்வேறு கேள்விகளையும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து வினாவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இனிப்புக் கடையிலிருந்த பெண் விரைவில் குணமடைய வேண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அசம்பாவிதமும் பாதிப்பும்: இந்த அறிக்கையில் அவர் கூறுகையில், ”அந்த சம்பவம் தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகளை எந்த அளவுக்கு மோசமாகப் பராமரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த சம்பவத்தில் அரசு போக்குவரத்து பேருந்து குறைந்த வேகத்தில் சென்று கடை மீது மோதியதிலேயே இந்த அளவுக்குப் பாதிப்புகள் இருந்தால், சற்று சிந்தியுங்கள் அதிக வேகத்தில் சென்று சாலையோரம் நிற்கும் மக்கள் கூட்டத்தின் மோதியிருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கு மட்டுமின்றி, அவற்றைப் பார்த்தாலே அஞ்சி ஓடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அச்சத்தை ஏற்படுத்தும் தொடர் சம்பவங்கள்: மேலும் இதே போல் தான் திண்டுக்கல் மாவட்டத்தின் பழனியில் கடந்த வாரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே அரசுப் பேருந்தின் சக்கரம் தனியாகக் கழன்று ஓடியது. அந்த பேருந்தின் ஓட்டுனர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்தும், உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டன. இந்த சம்பவத்தின் பரபரப்பு விலகும் முன்பே அதே திண்டுக்கல் மாவட்டத்தில், அரசுப் பேருந்து இனிப்புக் கடைக்குள் நுழைந்த இந்த விபத்து, மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் எங்கே? மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, நாளுக்கு நாள் அரசுப் பேருந்துகளின் நிலைமை கவலைகடமாக மாறி வருகிறது. அரசுப் பேருந்துகள் பாதியில் நிற்காத, விபத்துக்கு உள்ளாகாத நாளே இல்லை எனக் கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பேரத்திற்காவது விபத்து நிகழ்ந்து விடுகிறது. முன்னொரு காலத்தில் அரசுப் பேருந்துகள் மிகச்சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. அவை ஏழை, எளிய மக்களின் பயணத் தோழனாக இருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை செயலற்ற உள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பழுதடைந்த நிலையில் இயக்கப்படும் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தவை எல்லாம் வெறும் வாய்வார்த்தையாகவை முடிகிறது.
அரசுக்குத் தொடர் வேண்டுகோள்கள்: இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பலமுறை கண்டனம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மேலும் 17ஆயிரத்து 459 பேருந்துகளில் பழுதுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் மே 6-ஆம் தேதியே சரி செய்யப்பட்டுவிட்டதாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்தனர். ஆனால் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் நிலை மாறாமல் அப்படியே தான் இருந்து வருகிறது.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் வலியுறுத்துவது. தமிழக அரசு நினைத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அவற்றைச் சீரமைக்க முடியும். ஆனால் தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த மறுப்பது, புதிய பேருந்துகளை வாங்க மறுப்பது, பழைய பேருந்துகளைப் பழுதுபார்க்கத் தவறுவது என போக்குவரத்தில் கவனம் செலுத்துவதே இல்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கத் தாயாராவது போல் தெரிகிறது. இது ஒரு வேலை போக்குவரத்துக் கழகங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க நடக்கும் சதி திட்டம்போல் தெரிகிறது. இந்த அச்சத்தைப் போக்கத் தமிழக அரசு, இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
விரைந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: இவ்வாறு அரசு பேருந்துகள் மீது மக்களுக்கு இருக்கும் அச்சத்தைத் தமிழக அரசு போக்க வேண்டும். எனவே அரசு கூடுதல் நிதியை, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒதுக்கு வேண்டும், பழைய பேருந்துகள் அனைத்தையும் சிரியாகப் பழுது பார்க்க வேண்டும், போதிய அளவு தொழில்நுட்பப் பணியாளர்களை நியமிக்கவும், உதிரிப்பாகங்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 17 வருட கனவை நனவாக்கிய ஸ்டாலின்.. டெல்லியின் திமுக முகமாக மாறுகிறாரா கனிமொழி?