விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அதே கல்லூரியில் பயிலும் மாணவியரைத் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில், பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்.16ஆம் தேதி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ஏப்ரல் 17ஆம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு அறிவித்தது. அதன்பின், ஏப்.24ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். பின்னர், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், 1160 பக்கம் கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு செப்.7ஆம் தேதி இரண்டாவது கட்டமாக 200 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். மொத்தமாக 3 பேருக்கு எதிராக 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப் பத்திரிக்கையில் நிர்மலா தேவி பேசிய ஆடியோ உரையாடல் மற்றும் முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் செல்போனில் பேசிய கால் ஹிஸ்டரி, வாட்ஸ்ஆப்பில் மாணவிகளிடம் உரையாடிய பதிவுகள், சம்பந்தப்பட்ட மாணவியரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் மற்றும் மாணவிகளின் செல்போன்கள், நிர்மலா தேவியின் குரல் சோதனைப் பதிவு ஆகியவற்றைச் சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சாரத் தடுப்புச் சட்டம், தொழில் நுட்ப முறைகேடு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
11 மாதச் சிறைவாசத்திற்குப் பின் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச்.12 ஆம் தேதியன்று பேராசிரியை நிர்மலா தேவிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீ வில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கின் எதிரிகளாகக் கருதப்படும் பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும், வழக்கின் புகார்தாரர்களான கல்லூரி மாணவிகள் அவர்களது பெற்றோர் அருப்புக்கோட்டை கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகள், பேராசிரியர்கள் எனச் சுமார் 120 பேரிடம் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.
ஸ்ரீ வில்லிபுத்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், பேராசிரியை நிர்மலா தேவியை முதல் குற்றவாளியாக இன்று அறிவித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவி வழக்கறிஞர் தண்டனை விவரங்கள் குறித்து கோரிக்கை ஒன்றை முன் வைத்தார். குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிவுகளில் இரண்டு பிரிவுகள் என் கட்சிக்காரர் தொடர்புடையது அல்ல. எனவே, தண்டனையைக் குறைக்க வேண்டும் எனவும் இதுகுறித்து சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கால அவகாசம் கோரினர்.
அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று தீர்ப்பு விவரங்களை இன்றே அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு நாளை (ஏப்ரல் 30) இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி வழக்கு: திருவள்ளூர் கிளை இயக்குனர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்! - AARUdhra FINANCIAL SCAM CASE