சென்னை: தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சென்னை அடுத்த குன்றத்தூரில் தாம்பரம் மாநகர போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
விழிப்புணர்வு பிரச்சாரம்: இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், போதை பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக மாணவ, மாணவியர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
கள்ளச்சந்தையில் மது விற்பனை: ஒருபக்கம் போலீசார் போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்தல் அதனை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் சிலர் போலீசார் கண்களில் மண்ணை தூவி விட்டு கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது, குட்கா, பான் மாசலா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (ஆக.12) விழிப்புணர்வு பிரச்சாரம் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, அதே குன்றத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக காலை முதலே மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: நாவல் பழத்தால் பறிபோனதா உயிர்? 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்புக்கு என்ன காரணம்?